You are currently viewing குண்டர்களின் வன்முறை மூலம் அகிம்சைப்போராட்டத்தை  நசுக்க முயற்சிப்பதை வன்மையாகக்  கண்டிக்கிறோம்

குண்டர்களின் வன்முறை மூலம் அகிம்சைப்போராட்டத்தை  நசுக்க முயற்சிப்பதை வன்மையாகக்  கண்டிக்கிறோம்

mddr_letterhead_web

நூறு நாட்ளைக் கடந்து அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த “கோட்டா கோ கம ” இளைஞர்களை, பொலிசாரும்  பாதுகாப்புப் படையினரும், கடந்த ஜூலை 21ஆம் தேதி நள்ளிரவில், கொடூரமாகத் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கியமையை வன்மையாகக்கண்டிக்கிறோம். இப்போராட்டக்கார்களின் கூடாரங்களை  தகர்த்தெறிந்து ஒரு சிலர்   கைது செய்யப்பட்டமையும் வெறுக்கத்தக்கது. 

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு வசதி செய்து தருவதாக வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே,   இவ்வாறான மனிதாபிமானமற்ற தாக்குதலை மேற்கொண்டமை மூலம், ரணிலின் சொல்லுக்கும் செயலுக்கும்  இடையே பாரதூரமான வித்தியாசம் உள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.

நள்ளிரவின் நடுவே ஆயுதம் ஏந்திய முப்டையினரும், போலீசாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது போல்,அகிம்சைப் போராட்டக்காரர்கள் மீது ஓயாமல் தாக்குதலில் ஈடுபட்டுளனர். ஆண், பெண் வேறுபாடின்றி தடியடி நடத்தினர்.அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல. அங்கிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர் , சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டிய அதிகாரிகள், சட்டத்தையோ, நெறிமுறைகளையோ பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ள நிலையில், சட்டவிரோதமாக, அவமானகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வது வெட்கக்கேடான முட்டாள்தனமான செயலாகும். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சர்வதேச ஆதரவை நாடிக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கையின் நற்பெயருக்கு இந்நடவடிக்கைகள் பாரிய கேடு விளைவிப்பதை, புதிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாததும் வருந்தத்தக்கதாகும்.

நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டு நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள இவ்வேளையில், ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும்,ஆர்ப்பாட்டம் செய்வதும் மக்களின் பூரண உரிமையாகும். இது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைத் தாண்டிய இறையாண்மையின் பிரிக்க முடியாத மனித உரிமையாகும்.

நியாயமான கோரிக்கைகளை குண்டர்களைக் கொண்டு அடக்குவது மூலம்,  நாடு முழுவதும் போர்த் தீச்சுவாலையில் எரிந்த அண்மைக்கால வரலாறே எமக்கு உண்டு, அவ்வாறு இருக்கும்போது மீண்டும் அதே அனர்த்தத்திற்கு எம்மை இட்டுச்செல்ல வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

நியாயம்  மற்றும் சமத்துவத்தின் மூலமே சுபீட்சத்திற்கான பாதை உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம் (MDDR)

Print Friendly, PDF & Email

Leave a Reply